சென்னை: டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி முதன்முதலாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கு தமிழகஅரசு ஒப்புத லும் உதவியும் வழங்குவதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த டென்னிஸ் ஸ்டேடியம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இங்கு கடந்த 21 ஆண்டுகளாக சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. ஆனால், பல்வேறு நிதிமற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக 2017ஆம் ஆண்டு முதல் அந்தப் போட்டி நடைபெறுவது நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புனேவிற்கு மாற்றப்பட்டு அங்கு நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது. அது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நடப்பாண்டு, சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. டபிள்யூ டிஏ டூர் 250 மகளிர் டென்னிஸ் தொடர் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை முதன்முதலாக சென்னையில், நடைபெற உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜிடம், தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை சனிக்கிழமை வழங்கினார்.
இதுகுறித்து கூறிய தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை நகரத்தில் நடத்தப்படும் WTA250 நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மீண்டும் சர்வதேச டென்னிஸ் வரை படத்தில் இடம்பிடித்துள்ளது.
இந்தியாவில் WTA250 போட்டி நடப்பது இதுவே முதல் முறை, இந்த நிகழ்விற்கு தமிழகஅரசு முதன்மை ஆதரவாளராக இருக்கும். இந்த போட்டியை நடத்த நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானம் தயாராகி வருகிறது என்றவர், மே 14, 2022 அன்று, டபிள்யூடிஏ 250 டிராவில் 24 நேரடி நுழைவுகள், நான்கு வைல்டு கார்டுகள் மற்றும் நான்கு தகுதிச் சுற்றுகளுடன் 32 பேர் கொண்ட ஒற்றையர் போட்டிகள் நடைபெறும் என கூறினார்.