புத்த பூர்ணிமா நாளான இன்று புத்தர் பிறந்த இடமான நேபாள நாட்டின் லும்பினி பகுதிக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். நேபாள பிரதமருடன் அவர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளார்.
புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புத்தரின் பிறந்த இடமாகக் கருதப்படும், நேபாளத்தில் உள்ள லும்பினியில் வழிபாடு நடத்த, நேபாளத்துக்கு ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று செல்கிறார்.
இதையொட்டி பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியா – நேபாளம் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக கலாசார ரீதியாக நட்புறவு இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா, கடந்த மாதம் இந்தியா வந்திருந்த போது, அவருடன் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது பற்றி ஆக்கப்பூர்வமாக பேச்சு நடத்தியதாகவும், தமது நேபாள பயணம், இந்தியா – நேபாள உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இப்பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே 5 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் திட்டங்களில் முதலீடு செய்யும்படி நேபாள அரசு இந்தியாவைக் கேட்டுள்ளது.
லும்பினி பௌத்த பல்கலைக்கழகத்துடன் திரிபுவனம் பல்கலைக்கழகம் கல்வித்துறை தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.கலாச்சாரத்துறை சார்பிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
நேபாளத்தில் சீனா அதிகளவு முதலீடு செய்துள்ள நிலையில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியாவும் அதிகளவு நேபாளத்தில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.