சென்னை: “தமிழகத்தில் நடைபெற்ற அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி, தற்போதைய திமுகவின் ஆட்சி கற்கால ஆட்சி” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக ஆட்சியை உலகமே பாராட்டுகிறது. அவர் என்ன பாராட்டுவது. அதுதான் உண்மை. நல்லது செய்வதை யார் வேண்டுமானாலும் பாராட்டுவார்கள்.
அந்த வகையில் எங்களுடைய ஆட்சி என்பது ஒரு பொற்கால ஆட்சி. Golden rule என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் நிறுவியது. தற்போதுள்ள திமுக ஆட்சி கற்கால ஆட்சி. அதில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் காலத்தில் முதலிடத்தில் இருந்த மாநிலம் இப்போது 17-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. எவ்வளவு பெரிய பின்னடைவு என்று பாருங்கள்.
SKOCH இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் Governence-ஐ பொருத்தவரை தமிழகம் பின்னோக்கி 17-வது இடத்துக்கு சென்றுவிட்டது. இன்று பேருந்தில் சென்றால் நடத்துநருக்குப் பாதுகாப்பு இல்லை. அவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்படுகிறார். அதேபோல திமுக உறுப்பினரின் தலையை தேடிக் கொண்டுள்ளனர். திமுக கட்சியில் இருப்பவர்களுக்கே இன்று பாதுகாப்பு இல்லை.
காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகமிக மோசமான நிலையில் உள்ளது. மக்கள் வாழ்வதற்குரிய சூழல், அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்தது அதிமுக அரசுதான். இவை இரண்டுமே இல்லாத சூழல்தான் திமுக ஆட்சியில் உள்ளது.
மக்களைப் பொருத்தவரை விரும்பாத ஆட்சி தமிழகத்தில் நடந்துவரும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது இவையெல்லாம் பிரதிபலிக்கும்” என்று அவர் கூறினார்.