தாஜ்மஹாலின் 22 நிலத்தடி அறைகளின் படங்களை தொல்லியல் துறை வெளியிட்டது
இந்திய தொல்லியல் துறை தாஜ்மஹாலின் 22 நிலத்தடி அறைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த அறைகளில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகளைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. தாஜ்மஹாலின் அடித்தளத்தில் பூட்டிய 22 அறைகள் குறித்து பரவலான விவாதங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இந்த அறைகளுக்குள் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளின் படங்களை வெளியிட்டு பதற்றத்தைத் தணிக்க முயன்றுள்ளது.
நாட்டில் உள்ள இந்த அறைகளின் உள்ளடக்கம் குறித்த தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க இந்தப் படங்கள் பொது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எவரும் தொல்லியல் துறை இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தாஜ்மஹாலின் 22 நிலத்தடி அறைகளின் புகைப்படங்களை பார்க்கலாம் என்று தொல்லியல் துறை ஆக்ரா பிரிவின் தலைவர் ஆர் கே படேல் தெரிவித்தார்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த அறைகளைத் திறப்பதற்காக பாஜகவின் ரஜ்னிஷ் குமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மூடிய அறைகளில் பூச்சு மற்றும் சுண்ணாம்பு அலமாரி உட்பட விரிவான மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அறைகளின் மறுசீரமைப்பு பணிக்கு ஆறு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வார இறுதி நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டு உள்ளனர். 13,814 சுற்றுலாப் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கியுள்ளனர். 7154 சுற்றுலாப் பயணிகள் அவற்றை ஆஃப்லைனில் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: தாஜ்மஹால் நிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது: பாஜக எம்பி தியா குமாரிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM