உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி; பல்வேறு தரப்பினரும் பாராட்டு

அகமதாபாத்: உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் ஹேமந்த் லலித்சந்திர லியூவா – அவரது மனைவியான டாக்டர் சுரபிபென் ஹேமந்த் ஆகியோர் உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். அதனால் எவரெஸ்ட் சிகரத்தில் ஒன்றாக ஏறி சாதனைப் படைத்த முதல் இந்திய மருத்துவ தம்பதியினராக பாராட்டப்படுகின்றனர். இதுகுறித்து நேபாளத்தில் உள்ள ஸ்டோரி அட்வென்ச்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரிஷி பண்டாரி கூறுகையில், ‘குஜராத்தைச் சேர்ந்த டாக்டர் ஹேமந்த் லலித்சந்திர லியூவா, அவரது மனைவி டாக்டர் சுரபிபென் ஹேமந்த் லியூவா ஆகியோர் 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு அடைந்தனர். உலகின் மிக உயரமான சிகரத்தை (எவரெஸ்ட்) ஏறிய முதல் இந்திய மருத்துவ ஜோடி என்ற பெருமையை அவர்கள் பெற்றனர். டாக்டர் ஹேமந்த், என்ஹெச்எல் நிகாம் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பேராசிரியராக உள்ளார். அவரது மனைவி சுரபிபென், குஜராத் வித்யாபீடத்தில் தலைமை மருத்துவ அதிகாரியாக உள்ளார்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.