MBA பட்டதாரி, வங்கிப் பணியாளர், ஷார்ட்பிலிம் இயக்குநர் பிறகு திரைப்பட இயக்குநர் என லோகேஷின் வாழ்க்கை அவரது படம் போல சுவாரசியமான ஒன்று.
கோயம்புத்தூரைச் சேர்ந்த லோகேஷ் MBA படிக்க வந்தது தொடங்கி இயக்குனரானது வரை துணை நின்றது சென்னை நகரம். அதனால்தான் மாநகரம் படம்.
வங்கிப் பணியில் இருக்கும்போது கார்ப்பரேட் ஷார்ட் பிலிம் கான்டெஸ்ட் ஒன்றிற்கு குறும்படம் இயக்கினார் லோகேஷ். அந்த படம் வெற்றி பெறவும் சொல்ல நினைத்த கதையை சரியாக காட்ட முயன்றதுக்கு பாராட்டுகளையும் பெற்றார்.
பொருளாதார காரணங்களால் வங்கி பணியை கைவிட முடியாத நிலை. வார இறுதிகளில் படப்பிடிப்பு என சுற்றிக் கொண்டிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜின் அறிமுகம் அந்த கான்டெஸ்ட் வழியாக கிடைக்கிறது. அவரது ஊக்கத்தின் பெயரில் `களம்’ படம். அவியல் என்கிற ஆந்தாலஜியில் ஒன்றாக இடம்பெறுகிறது.
அதிலிருந்து `மாநகரம்’ படத்திற்கான வாய்ப்பு கிடைக்கிறது. எந்த இயக்குனரிடமும் பணிபுரியாத போதும் கச்சிதமாக முதல் படத்தை எடுத்த முடிக்கிறார்.
குவென்டின் டாரன்டினோ மேற்கோள் ஒன்றை லோகேஷ் குறிப்பிடுகிறார், “நான் படம் எடுக்க சொல்லித் தரும் பள்ளிகளுக்குச் சென்றதில்லை, நான் படங்களுக்கு தான் சென்றேன்” என்பதுதான் அது.
`மாநகரம்’ படத்திற்கு பிறகு இரண்டு படங்கள் பெயரளவிலேயே இருந்தன. அதற்கு நடுவில் இயக்க முடிவெடுத்ததுதான் `கைதி’ படம்.
கார்த்தி, நரேன் உள்ளிட்டோர் நடித்தது வெளியான கைதி நல்ல வரவேற்பைப் பெற்றது. கைதிக்குப் பிறகு `மாஸ்டர்’. விஜய், விஜய் சேதுபதி என இரண்டு ஹீரோக்களை கதையில் கையாண்ட விதம் பலருக்கும் பிடித்திருந்தது.
கமல் படங்கள்தான் தனக்கு சினிமாவை சொல்லிக் கொடுத்தது என பல மேடைகளில் குறிப்பிடும் லோகேஷ் கமலை வைத்து இயக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இவரின் `கைதி’, `மாநகரம்’ ஆகிய படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகின்றன. ரசிகர் டு இயக்குநர் வரையிலான லோகேஷின் பயணத்திற்குப் பின் அயராத 12 ஆண்டுகளுக்கான உழைப்பு இருக்கிறது. விக்ரமில் லோகேஷின் மேஜிக் காண ரசிகர்கள் வெயிட்டிங்.