ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பி.இ பட்டதாரி இளைஞரான உதயகுமார், நான்கு சக்கர வாகனம் கேட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் 60 முறைக்குமேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு, அலைந்து வருவதாக நம்மிடம் வேதனையுடன் தெரிவித்தார்.
அரசின் இலவச நான்கு சக்கர வாகனத்துக்காக ஐந்து ஆண்டுகளாக அல்லாடும் உதயகுமாரின் நிலைமை குறித்து, நேற்றைய தினம் விகடன் இணையதளத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
விகடன் செய்தியின் எதிரொலியாக, உதயகுமாரின் மனுவை மாவட்ட நிர்வாகம் உடனடியாகப் பரிசீலித்து அவருக்கு நான்கு சக்கர வாகனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதற்கிடையில் தருமபுரி எம்.பி செந்தில்குமார், விகடன் செய்தியை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போனில் பேசினார்.
அதையடுத்து, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உதயகுமாருக்கு நான்கு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத்துக்கும், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நல அலுவலர் ஜெய்சங்கருக்கும், உதயகுமார் நன்றி தெரிவித்தார்.
நான்கு சக்கர வாகனம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த உதயகுமாரிடம் பேசினோம். “சார் எல்லாம் விகடனாலதான், 5 வருஷமா அலைந்தேன் சார்… என்னை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. நீங்கள் என்னிடம் வந்து பேசியபோதுகூட எல்லோரையும்போல நீங்களும் என்மீது பரிதாபப்பட்டுதான் கேட்கிறீர்கள் என நினைத்தேன். ஆனால், நீங்கள் விகடனில் என்னைப் பற்றி செய்தி வெளியிட்ட உடனே, நேற்று அதிகாரிகள் என்னைத் தொடர்புகொண்டு, `உங்களுக்கு நாளை நான்கு சக்கர வாகனம் வழங்கப் போகிறோம். ஆட்சியர் அலுவலகம் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்!’ எனக் கூறினார்கள். அதன்படி, இன்று ஆட்சியர் கையால் நான்கு சக்கர வாகனத்தைப் பெற்றுக்கொண்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது… விகடனுக்கு நன்றி!” என்றார் கண்களில் நீர் பெருக.