மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. கடந்த சீசன் வரை பெங்களூரு அணியின் சுழல் நட்சத்திரமாக விளங்கி வந்த யுஸ்வேந்திர சாஹல் இந்த முறை ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இதுவரை 13 போட்டிகளில் 24 விக்கெட்களை கைப்பற்றியுள்ள அவர் இந்த சீசனின் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ள சாஹல் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை. இந்த நிலையில் தற்போது அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாஹல் கூறுகையில், ” எனது கடைசி 10 ரஞ்சி டிராபி போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். கண்டிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட் தான் எனது முதல் முன்னுரிமை. டெஸ்ட் வீரர் என்று அழைக்கப்படுவது வித்தியாசமான உணர்வு என்று நான் நினைக்கிறேன்.
நிறைய வீரர்கள் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறார்கள், ஆனால் உங்கள் திறமையும் பொறுமையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் சோதிக்கப்படுகிறது” என சாஹல் தெரிவித்தார்.