கையெழுத்தானது சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிற்கிடையே இந்த கையெழுத்து அமலானது.
ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கையெழுத்தாகியுள்ள இத்திட்டத்தின்படி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5,855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த இரண்டு அடுக்கு சாலை, உயர்மட்ட சாலையில், சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும் / இறங்கும் சாய் தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
image
நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் நிலுவையிலிருந்த இப்பணியினை செயல்படுத்திடும் வகையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகிய துறையினரால் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையொப்பமிடப்பட்டது. இந்நிகழ்வின்போது, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் டாக்டர் வி.கே. சிங், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் திரு. சுனில் பாலிவால், இ.ஆ.ப., துணைத் தலைவர் திரு. எஸ். பாலாஜி அருண்குமார், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முதன்மை பொது மேலாளர் திரு.பி.ஜி. கோடாஸ்கர், மண்டல அலுவலர் திரு. எஸ்.பி. சோமசேகர், தேசிய நெடுஞ்சாலைகள் முதன்மை பொறியாளர் திரு. பாலமுருகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேவல் ஏரியா Flag Officer Commanding ரியர் அட்மிரல் திரு. புனித் சதா, Naval Officer In-charge கமாண்டர் திரு. எஸ்.ராகவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இத்திட்டம் கடந்து 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ரூ.1,815 கோடி ரூபாய் செலவில் மதுரவாயல் – சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்காக 2007-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
image
தொடர்ந்து 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பறக்கும் சாலை திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை அப்போதைய அரசு மீண்டும் மேற்கொண்டு, கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், டெல்லி சென்ற போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபின், இத்திட்டம் மீண்டும் துவக்கப்படும் என்று அறிவித்தார். ரூ.1800 கோடியாக தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டிருந்த இத்திட்டம் 2018-ல் ஆண்டில் ரூ.2,400 கோடியாக உயர்த்தப்பட்டு, பின்னர் ரூ.3,087 கோடியாக உயர்த்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.
இதையும் படிங்க… “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகும் வாய்ப்புள்ளது”- பி.டி.அரசகுமார் பேச்சு
இந்த நிலையில், சென்னை துறைமுகத்தில் தொடங்கி சிந்தாரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயலில் முடிவடையும் இந்த சாலைக்காக, 6,993 சதுர மீட்டர் தனியார் நிலமும், 2,722 சதுர மீட்டர் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த உயர்மட்ட சாலை அமையவுள்ள மொத்த தூரத்தில் கூவம் ஆற்றில் வருகின்ற 10 கிலோமீட்டர் தூரமும் கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்திற்குள் வருவதால் இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டு, 2011ல் அனுமதியும் பெறப்பட்டது.
image
இந்த நிலையில், திட்ட பணிகள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டதால், பல்வேறு நிபந்தனைகளுடன் மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 10 வழி சாலை, அணுகு சாலை, இணைப்பு சாலை என கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றாற் போல நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்மட்ட சாலை திட்டத்திற்கு வரும் 26 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.