கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. முகலாய மன்னர் அவுரங்கசிப் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதியில் இந்துக் கோயில் இருப்பதாகவும், எனவே இங்கு வழிபட தங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மசூதியில் வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய கடந்த வாரம் உத்தரவிட்டது. இதற்கு மசூதி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
image
மூன்று நாள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து பெண்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை சீல் வைத்து மூட வாரணாசி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதே சமயத்தில், அங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக வெளியான தகவல், உத்தரபிரதேசம் முழுவதும் காட்டுத் தீ போல பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி பாபர் மசூதி விவகாரம் போல இதுவும் பூதாகாரமாகி விடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவி வருகிறது. இதுகுறித்து உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “எவ்வளவு முயற்சித்தாலும் உண்மையை நீண்டகாலத்துக்கு மறைக்க முடியாது” எனக் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி கூறுகையில், “பாபர் மசூதியை அடுத்து மற்றொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை” எனக் கூறியிருக்கிறார். இந்த மசூதி சர்ச்சையால் உ.பி.யில் இரு சமூக மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
image
இன்று விசாரணை
இந்நிலையில், இந்த கள ஆய்வை நிறுத்தக் கோரி கியான்வாபி மசூதி சார்பில் இன்டாசாமியா என்ற குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவானது, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.