ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து பன்ஸ்வாரா மாவட்டத்தில் நேற்று காங்கிரஸ் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2 இந்துஸ்தானை உருவாக்க நினைக்கிறது. ஒன்று பணக்காரர்களும் ஒன்றிரண்டு தொழிலதிபர்களுக்குமான இந்துஸ்தான்.
மற்றொன்று தலித்துகள், விவசாயிகள், ஏழைகளுக்கான இந்துஸ்தான். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இந்துஸ்தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு வலுப்படுத்தி வைத்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சீர்குலைத்துவிட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அமல்படுத்தினார். தவறான முறையில் ஜிஎஸ்டியை கொண்டு வந்தார். இதுபோன்ற தாக்குதல்களால் நமது பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.