கோவை: கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அபுதாபியில் இருந்து மனைவியுடன் சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு நேற்று (மே 16-ம் தேதி) மதியம் வந்தார். கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால், ஹெலிகாப்டரில் செல்வதற்கு வானிலை ஒத்துழைக்கவில்லை.
மேலும், உதகையில் கனமழை பெய்து கொண்டிருந்ததால் சாலை வழிப் பயணமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் நேற்று இரவு தங்கினார்.
இந்நிலையில், இன்று (மே 17-ம் தேதி) காலை கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக உதகைக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வானிலை ஒத்துழைக்காததால் ஹெலிகாப்டர் பயணம் இன்று காலையும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7.05 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் அவிநாசி சாலை, சிட்ரா, காளப்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக உதகைக்கு புறப்பட்டுச் சென்றார். குடியரசு துணைத் தலைவர் செல்லும் வழி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை அவர் உதகையில் தங்கியிருப்பார்.