தாராவியில் வசிக்கும் 20 வயது பெண் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பை வந்திருந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்த போது இரண்டு பேர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைத்து கத்தியை காட்டி மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு சம்பவத்தை வீடியோ எடுத்துக்கொண்டு, வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டினர்.
ஆனாலும் இச்சம்பவம் குறித்து அப்பெண் தாராவி போலீஸில் புகார் செய்தார். வன்கொடுமை செய்தவர்கள் யார் என்று அப்பெண்ணுக்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண் இருக்கும் வீட்டுக்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த 100 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பிறகு இவ்வழக்கில் துப்பு துலங்கியது. இது குறித்து தாராவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் கூறுகையில், “இரண்டு சகோதரர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க 102 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அதில் ஒன்றில் கடைக்காரர் ஒருவரிடம் குற்றவாளி பேசிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தோம். உடனே அக்கடைக்காரரிடம் விசாரித்த போது அவர் தன்னுடன் பேசிக்கொண்டிருந்தது நிலேஷ் சவுகான்(20) என்றும் விலே பார்லேயில் இருப்பதாகவும் தெரிவித்தார். உடனே நிலேஷ், அவரின் சகோதரர் அனில் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தோம்.
அவர்களிடம் விசாரித்த போது அவர்களது குடும்பம் நீண்ட நாட்களாக தாராவியில் தான் வசித்துள்ளது. சமீபத்தில்தான் விலே பார்லேயிக்கு சென்றுள்ளனர். திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அனில் தனது குடும்பத்தோடு தாராவி வந்துள்ளார். அனில் பாதிக்கப்பட்ட பெண்ணை தாராவி கார்டன் ஒன்றில் பார்த்து கவரப்பட்டுள்ளார். உடனே அப்பெண்ணிடம் பேச முயன்றுள்ளார். ஆனால் அப்பெண் பேச மறுத்துவிட்டார். இதனால் அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்பெண் வீட்டுக்குள் நுழைந்ததும் இவர்களும் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி ஒருவர் மாற்றி ஒருவர் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு அதனை வீடியோவும் எடுத்துக்கொண்டுள்ளனர். சம்பவத்தை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்” என்றார்.