துப்பாக்கி தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் சுமார் 150 பேர், கடந்த 18 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் துப்புறவு பணி, பராமரிப்பு பணி உள்ளிட்ட வேலைகளை பார்த்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக காண்ட்ராக்ட் எடுத்த மனோன்மணி என்ற ஒப்பந்த நிறுவனம், பழைய தொழிலாளர்களை நீக்கிவிட்டு புதிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது.
அதனைத் தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டுமெனக் கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதற்கு ஒப்பந்த நிறுவனமும், துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது அந்த மனோன்மணி நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடாந்து தற்பொழுது புதிதாக வரும் காண்ராக்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த மே ஒன்றாம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்,
இந்த நிலையில் இது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என காவல்துறையினர் கூறியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் தலைமையில் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், ஒப்பந்த தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பெரியசாமி, பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன், இளநிலை விஜிலன்ஸ் மேலாளர் வரதன், இளநிலை செக்யூரிட்டி மேலாளர் விஜயகுமார், நவல்பட்டு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, தொழிற்சாலை முன்பு அமர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM