புதுடெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்சிராவிடம் விசாரணை நடத்திக் கொள்ள அமலாக்கப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
விசாரணை தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவருக்கும் 24 மணி நேரத்துக்கு முன்னதாக நோட்டீஸ் கொடுத்துவிட்டு விசாரணையை மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொல்கத்தாவிலேயே விசாரணையை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல் விசாரணைக்கு முன்னதாகவே கொல்கத்தா காவல் ஆணையர், மேற்குவங்க தலைமைச் செயலர் ஆகியோருக்கும் உரிய தகவல் அளித்து விசாரணைக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுமாறு கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் மாநில அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்துவதை நீதிமன்றம் பொறுத்துக் கொள்ளாது என்று மாநில அரசை எச்சரித்துள்ளது. இதனால், அபிஷேக் விசாரணை வளையத்திற்குள் வருவது உறுதியாகியுள்ளது.
வழக்கு பின்னணி: நிலக்கரி ஊழல் தொடர்பாக கடந்த 2020 இறுதியில் மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறி மேற்குவங்கத்தின் அனுப் மஜ்ஹி என்ற லாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்குவங்கம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது நிலக்கரி ஊழல் வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருச்சிரா பானர்ஜி, அவரின் தங்கை மேனகா காம்பிர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ தெரிவித்தது. ருச்சிரா பானர்ஜி, அவரின் தங்கை மேனகா காம்பிர் இருவரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து அபிஷேக் பானர்ஜி அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நம்பர் 2 அபிஷேக்! திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நம்பர் 2 என்று கருதப்படும் அபிஷேக் பானர்ஜி கடந்த பிப்ரவரி மாதம் தான் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். ஆனால், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நிலக்கரி சுரங்க மாபியா கும்பலை இயக்கும் அனுப் மஜ்ஹியுடன் கூட்டு சேர்ந்து கடந்த பத்தாண்டுகளில் அபிஷேக் பானர்ஜி 900 கோடி ரூபாய் பணம் சம்பாதித்திருக்கிறார் என்பது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் குற்றச்சாட்டு.