8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்!| Dinamalar

மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று (மே 17) பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்து ரூ.867.2 என்ற விலையில் வர்த்தகமாகின. அந்த விலையில் பலரும் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதால் சரிவிலிருந்து சற்றே எழுந்து 11 மணி அளவில் ஒரு பங்கின் விலை ரூ.900 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

எல்.ஐ.சி.,யின் ரூ.20,557 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று மத்திய அரசு பணமாக்குகிறது. அதற்கான ஆரம்ப பங்கு வெளியீடு சில நாட்களுக்கு முன் துவங்கியது. இதில் எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் ஆகியோர் ஆர்வமாக பங்கேற்றனர். மும்மடங்கிற்கு எல்.ஐ.சி., விண்ணப்பங்கள் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டன. ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரிதாக இதில் முதலீடு செய்யவில்லை.

இதற்கிடையே பங்குச்சந்தைகள் கடந்த ஒரு வாரமாக சரிவடைந்து வந்தன. பணவீக்கம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, உற்பத்தி செலவுகள் கூடியது, வங்கி வட்டி விகித ஏற்றம் ஆகியவை சந்தையின் போக்கை பாதித்தன. திங்களன்று சற்றே ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன. இன்றும் பச்சை நிறத்தில் தான் காணப்படுகின்றன. அதனால் எல்.ஐ.சி., லாப விலையில் பட்டியலாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

latest tamil news

ஆனால் ஒதுக்கப்பட்ட விலையை விட 8.11 சதவீதம் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை தந்தது எல்.ஐ.சி., பின்னர் அதிலிருந்து சற்றே மீண்டு 11 மணி நிலவரப்படி 5% சரிவில் தொடர்கிறது. பாலிசிதாரர்களுக்கு ரூ.889 என்ற தள்ளுபடி விலையில் ஒதுக்கப்பட்டதால் அவர்கள் ஒரு பங்கிற்கு சுமார் 10 ரூபாய் லாபம் பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.