நெல்லை:
நெல்லை அருகே அடை மிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடந்து வரும் மீட்புப் பணிகளை திருநாவுக்கரசர் எம்.பி. இன்று காலை நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கல்குவாரியில் நடந்த விபத்தில் 6 பேர் சிக்கி கொண்டனர். அதில் 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நேற்று நான், காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி ஆகியோர் நேரில் சென்று பார்த்தோம். அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் 2 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறோம். மேலும் சிக்கியுள்ள 2 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்களை மீட்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.1 லட்சம் வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்.
இந்த குவாரியை பார்த்ததுமே விதிமுறை மீறி தான் செயல்பட்டு உள்ளது என்பது தெரிகிறது. இந்த கல்குவாரி முறைகேடாக செயல்பட்டதற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாநிலங்களில் உள்ள அனைத்து குவாரிகளும் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.