சென்னை: அரசு வாரிய குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அங்கு வசிக்கும் மக்களை ஒருங்கிணைத்து “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” என்ற திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
சென்னை கோடம்பாக்கம் சுபேதார் கார்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், அங்கு அரசு குடியிருப்புகள் பழுந்தடை உள்ளதால், அவற்றை இடித்து புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களில் தற்காலிகமாக வசிக்க உதவும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 24 ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர்,. 256 குடும்பங்களுக்குக் கருணைத் தொகையாக மொத்தம் 61 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இங்கு வசிக்கும் மக்கள் ஒரு மாதத்தில் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டார்கள் என்றால், அடுத்த 18 மாதங்களில் வீடுகளைக் கட்டி முடித்து 19வது மாதத்தில் பயனாளிகளுக்கு மீண்டும் வீடுகளை வழங்கி விடுவோம். கடந்த ஆட்சியில் வாரிய குடியிருப்புகள் எங்குமே அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை. அதையெல்லாம் சரி செய்து வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 170 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் அடைப்புகளை சரிசெய்ய இதுவரை கருவி இல்லை. வாரியம் சார்பில் புதிதாக கருவிகள் வாங்கி உள்ளோம். இனி கழிவுநீர் அடைப்பு பிரச்சனை ஏற்படாது. வாரிய குடியிருப்பு பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” என்ற திட்டத்தை உருவாக்கி அங்கு வசிக்கும் மக்களில் இருந்து நிர்வாகிகளைத் தேர்வு செய்து நியமிக்க உள்ளோம்.
3 மாதத்திற்கான தேவையான பராமரிப்பு பணத்தை வாரியம் சார்பில் வழங்குவோம். ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது என்றால் வாரியம் சார்பில் 50% தொகை வழங்கப்படும். மீதித் தொகையைக் குடியிருப்பு வாசிகளின் சங்கம் சார்பில் திரட்டி பராமரிப்பு பணிகளைச் செய்து கொள்ளும் வகையில் செயல்படுத்த உள்ளோம்.
இவ்வாறு பேசினார்.