லக்னோ: சித்ரகூட் பாலாஜி கோயிலில் 16 சாமி சிலைகள் கொள்ளை போன விவகாரத்தில், இரவில் பயங்கரமான கனவு வருவதாக கூறி கொள்ளையடித்த சிலைகளை கொள்ளையர்கள் திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூடத்தில் உள்ள பாலாஜி கோயிலில், 16 பழமையான சிலைகள் கடந்த சில தினங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டன. அவற்றில் 14 சிலைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் கோயிலில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இந்த சிலைகளுடன், ஒரு கடிதத்தையும் கொள்ளையர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அதில், தாங்கள் மனம் திருந்தி கோயில் சிலைகளை திருப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்தும் வருகின்றனர். இதுகுறித்து சதர் கோட்வாலி போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் சிங் கூறுகையில், ‘கடந்த மே 9ம் தேதி பாலாஜி கோயிலில் இருந்து பல கோடி மதிப்பிலான பழமையான 16 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கோயில் பூசாரி மஹந்த் ராம்பாலக் மற்றும் அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் மீது வழக்குபதியப்பட்டது. கொள்ளை போன 16 சிலைகளில் 14 சிலைகள் ஜவஹர்நகரில் வசிக்கும் பூசாரி மஹந்த் ராம்பாலக் என்பவரது வீட்டின் அருகே கொள்ளையர்கள் வைத்துவிட்டு சென்றுள்ளனர். கடிதம் ஒன்றையும் வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதில், தாங்கள் மனம் திருந்தியதால் கோயில் சிலைகளை திருப்பி வைத்துவிட்டதாகவும், இரவில் தங்களுக்கு பயங்கரமான கனவுகள் வருவதாகவும் எழுதியுள்ளனர். தொடர் விசாரணைக்கு பின்னர், இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். 16 சிலைகளில் எஞ்சிய இரண்டு சிலைகள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகிறோம்’ என்றார்.