உ.பி: ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்? – சர்ச்சையும், பின்னணியும்!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி என்ற மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அம்மனுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிங்கார கவுரி அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக ஞானவாபி மசூதியில் உள்ள கோயிலை மறுசீரமைக்க வேண்டும் என 1991-ம் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிா்த்து சன்னி வக்பு வாரியம், அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் ஆகியவை தொடுத்த வழக்கில் மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், ஞானவாபி மசூதியின் சுவரில் உள்ள சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தாக்கலான மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி ரவிகுமாா் திவாகா், மசூதியை அளவிட்டு விடியோ பதிவு செய்து மே 17-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்தப் பணிகளை மேற்கொள்ளக் குழு அமைத்து கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார். இந்த ஆய்வை மேற்கொள்ளக் கூடாது என்று மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பார்க்காததால், இப்போது கள ஆய்வுக்குத் தடை விதிக்க முடியாது” என்று கூறியது. எனினும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

ஞானவாபி மசூதி

இந்நிலையில் மசூதியில் கடந்த சனிக்கிழமை தொடங்கி 3 நாள்களாக நடந்த ஆய்வு நேற்று (16-ம் தேதி) நிறைவு பெற்றது. இந்த ஆய்வில் வழக்கறிஞர் ஆணையர் அஜய்குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், மனுதாரர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள் ஆகியோர் என மொத்தம் 36 பேர் இருந்தனர். ஆய்வின்போது எதுவும் அசம்பாவிதம் நடைபெற்று விடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மசூதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன்படி, நடைபெற்ற ஆய்வில் மசூதியின் உள்ளே இருந்த செயற்கை குளத்தில் சிவலிங்கம் கிடைக்கப்பெற்றதாகக் கூறி, ஹரிஷங்கர் ஜெய்ன் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுகினார். மேலும், மசூதி வளாகத்திற்குள் உள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதியைச் சீல் வைக்குமாறும், அந்தப் பகுதிக்குள் ஆள்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதன்படி, வளாக பகுதியைப் பூட்டி சீல் வைக்க பனாரஸ் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஆள்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் தடுக்க வளாக பகுதி சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வின்போது சிலை எதுவும் கிடைத்ததாக ஆய்வுக் குழு தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேபோல, ஆய்வுப் பணிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்து, அதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

ஞானவாபி மசூதி

தற்போது வெளியான இந்த தகவலை மசூதி நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும், குளத்துக்குள் இருப்பது சிவலிங்கம் இல்லை என்றும் அந்த குளம் மசூதிக்கு வருபவர்கள் தொழுகைக்கு முன் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான செயற்கை நீரூற்று அமைப்பு கொண்டது என்று மசூதி தரப்பு தெரிவித்துள்ளது. இதனையே ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நடைபெறும் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் போக்கை வைத்தே அடுத்தகட்ட விவரம் தெரிய வரும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.