திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்கான அனைத்து உபகரணங்களும், இயந்திரங்களும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்தார்.
கல்குவாரியில் நடைபெறும் மீட்பு பணிகளை செவ்வாய்கிழமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3-வது நாளாக நடைபெறுகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர், காவல்துறையினர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் என அனைவரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். போதுமான உபகரணங்களும், இயந்திரங்களும் நம்மிடம் உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இரும்பு ரோப் வரவழைக்கப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகள் தொடர்பாக நாட்டிலுள்ள சுரங்கத்துறை நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து பாறைகள் சரிந்து விழுவது மற்றும் நிலச்சரிவு ஆகியவை மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இங்குள்ள பாறைகளின் உறுதி தன்மை குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. பாறைகள் எளிதில் உடைந்து விழுகின்றன. மேலும் மழை பெய்யாமல் இருக்க வேண்டும். மழை பெய்தால் மேற்கொண்டு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது 5-வது நபரை மீட்பு படையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவரை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.