சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 25 கோடி மதிப்புள்ள உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் பதுக்கி வைக்கப்பட்டு, கடத்தப்படவுள்ளதாகச் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, அப்பிரிவின் காவல் இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், காவல் தலைவர் தினகரன் வழிகாட்டுதலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், உதவி ஆய்வாளர்கள் ராஜசேகரன், செல்வராஜ் உள்ளிட்டோர் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல நடித்து சிலை கடத்தல்காரர்கள் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இச்சிலைக்கு விலை ரூ. 25 கோடி என கடத்தல்காரர்கள் கூறினர். சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினரின் பேச்சை நம்பிய கடத்தல்காரர்கள் சிலையைக் காண்பித்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை வெள்ளவேடு புது காலனியை சேர்ந்த எத்திராஜ் மகன் பக்தவச்சலம் என்கிற பாலா (46), சென்னை புதுசத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாக்கியராஜ் (42) ஆகியோரை சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினர் கைது செய்தனர்.
இதையடுத்து, இருவரும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கமும் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பச்சைக்கல் லிங்கத்தை உலோகத்தாலான நாகாபரணம் தாங்கியுள்ளது. அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வார் உருவம் உள்ளது. இதன் உயரம் சுமார் 29 செ.மீ., அகலம் 18 செ.மீ., பீடத்தின் அடிபாக சுற்றளவு சுமார் 28 செ.மீ., எடை 9.8 கிலோ.
பச்சைக்கல் லிங்கத்தின் உயரம் மட்டும் சுமார் 7 செ.மீ. அதன் சுற்றளவு 18 செ.மீ. ஆக உள்ளது. இந்தச் சிலை ஏறத்தாழ 500 ஆண்டுகள் தொன்மையானது. லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் எடுத்த நாகத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளைத் தூக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் நேபாள பாணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது என சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினர் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM