ஹசாரிபாக்: தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்ற தனது கடைசி ஆசை நிறைவேறிய பிறகு உயிரிழந்துள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 105 வயது முதியவர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த மாநிலம் தான் ஜார்க்கண்ட். இப்போது அந்த மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. சுமார் 4,300-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் முடிந்த சில நாட்களில் முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அதில் தான் அந்த முதியவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
முதியவரின் பெயர் வரன் சாஹு என தெரிகிறது. கடந்த 1917, ஜூன் 27 அன்று அவர் பிறந்துள்ளார். அந்த மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள சௌபரான் வட்டத்தில் அமைந்துள்ள பார்தாபூர் கிராமத்தை சேர்ந்தவர் அவர். 105 வயதான அவரோ இந்த தேர்தல் தனது கடைசி தேர்தலாக இருக்கலாம் என எண்ணியுள்ளார். அதனால் தவறாமல் தனது வாக்கினை செலுத்திவிட வேண்டுமென முடிவு செய்துள்ளார். தனது விருப்பத்தை மகனிடம் தெரிவித்துள்ளார்.
தந்தையின் சொல்லை தட்ட முடியாத அவரது மகன், வாடகைக்கு கார் பிடித்து வாக்களிக்கும் மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். சாஹு, வாக்களித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்துள்ளது. தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்ததில் தனக்கு மனநிறைவு தான் என தெரிவித்துள்ளார் அவரது மகன்.