கூடலூர் அருகே குடியிருப்பை ஒட்டி மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை அடித்துக் கொன்றது புலியா சிறுத்தையா என வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் பொருத்தி அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ராக்வுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவஞானம். இவர் நான்கு மாடுகளை வளர்த்துவரும் நிலையில் நேற்று மாலை முதல் பசு மாடு ஒன்றை காணவில்லை. காணாமல் போன பசு மாட்டை பல இடங்களிலும் தேடி அது கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை பசு மாடு தேயிலை செடிகளுக்கு இடையே இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இறந்த பசு மாட்டை ஆய்வு செய்தபோது, அதனை புலி தாக்கி கொன்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மாடு இறந்து கிடந்த பகுதியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாடு இறந்து கிடந்த பகுதியில் நான்கு தானியங்கி கேமராக்களை பொருத்தி இருக்கின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் புலி தாக்கி மாடு உயிரிழந்ததா அல்லது சிறுத்தையால் கொல்லபட்டதா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. தானியங்கி கேமராக்களில் பதிவாகும் புகைப்படங்களை கொண்டு அதனை உறுதிப்படுத்த முடியும் என்றனர். குடியிருப்புப் பகுதிகளில் குட்டி புலி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM