புதுச்சேரி: புதுச்சேரியில் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்ற ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸார் குருசுக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரவாடி பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண் உள்பட மூவரைப் பிடித்து சோதனையிட்டனர். சோதனையில் அவர்களிடம் கொக்கைன், எம்டிஎம்ஏ உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியாவைச் சேர்ந்த ஜஸ்டின் டெல்வின் தாரிமோ (29), சூடானைச் சேர்ந்த டேவிட் மைக்கேல் எலியா (26), கென்யாவின் நைரோபியைச் சேர்ந்த பிரான்சிஸ் லக்கி ஓட்டேரி (22) ஆகியோர் என்பதும், இவர்கள் தமிழகத்தின் பெரியமுதலியார்சாவடி, சிதம்பரம் முத்தையா நகர், சேலம் ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளில் தங்கியிருப்பதும், இவர்கள் மூவரும் புதுச்சேரி குருசுக்குப்பத்தில் சந்தித்து போதைப் பொருட்களை மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்ய காத்திருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 23 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 21 கிராம் கொக்கைன் மற்றும் 30 எண்ணிக்கையிலான 12 கிராம் எடையுள்ள எம்டிஎம்ஏ (மெத்திலின் டையாக்சி மேத்தாம்பிட்டமைன்) மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புதுச்சேரி போதை பொருள் தடுப்புப் பிரிவு எஸ்பி வம்சிதரெட்டி கூறுகையில், ”கைதானவர்களில் ஜஸ்டின் டெல்வின் தாரிமோவைத் தவிர மற்ற இருவரும் கல்லூரியில் படிப்பதற்காக இந்தியா வந்து, விசா காலாவதி ஆன பிறகும் தமிழகத்தில் தங்கியிருந்துள்ளனர். இவர்களுக்கு டெல்லியிலிருந்து கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கூரியர் மூலம் கிடைத்துள்ளது. அதனை இவர்கள் பெற்று, புதுச்சேரியில் விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நபர்களையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
தொடர்ந்து ஜஸ்டின் டெல்வின் தாரிமோ உள்ளிட்ட மூன்று பேரையும் இன்று (மே.17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.