உத்தரப்பிரதேசத்தில் வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவர் வாரணாசி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், “முகலாய மன்னர் ஔரங்கரசீப்பால், வாரணாசியின் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது. அதன் பிறகுதான் அங்கு கியான்வாபி மசூதி கட்டப்பட்டது. எனவே, அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது. மசூதி இருக்கும் இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டால், அதற்கான சான்றுகள் கிடைக்கும். காசிவிஸ்வநாதர் லிங்கமும் மசூதி இருக்கும் இடத்தில்தான் புதைக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி உரிமையியல் நீதிமன்றம், மசூதியில் மூன்று நாள்கள் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இந்த ஆய்வின் 3-ம் நாளான நேற்று நடந்த வீடியோ ஆய்வில், விசாரணைக்குழுவுடன் சென்ற மனுதாரர் சோகன் லால் ஆர்யா, மசூதியினுள் சிவலிங்கம் இருப்பதாகவும், உறுதியான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும் விசாரணைக்குழு கண்டுபிடித்திருப்பதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து விசாரணைக்குழுவின் சோதனை முடிவடைந்ததையடுத்து வாரணாசி நீதிமன்றம், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்குச் சீல் வைக்குமாறும், அப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல தடை தடைவிதிக்குமாறும் உத்தரவிட்டது. ஆனால், ஆய்வின்போது சிலை எதுவும் கிடைத்ததாக ஆய்வுக் குழு தரப்பில் எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியத் (Sunni Central Waqf Board) தலைவர் ஜுஃபர் ஃபாரூகி (Zufar Faruqi), “இந்த உத்தரவு, இந்திய அரசியலமைப்பின் வழிபாட்டு உரிமைச் சட்டத்தை (Places of Worship (Special Provisions) Act, 1991) மீறுகிறது. மேலும், அயோத்தி தீர்ப்பிலும்கூட, பாபர் மசூதி இருந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், கடைசியில் மசூதி இடிக்கப்பட்ட பிறகும்கூட எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை’’ என்றார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “மசூதி வளாகத்தில் வெளிப்படையாகக் காணப்பட்ட சிவலிங்கம் முஸ்லிம்களின் தொழுகைக்கான உரிமையைப் பாதிக்காமல் பாதுகாக்கப்படுவதை, மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வாரணாசி பகுதிக்குச் சீல் வைத்து மக்கள் நுழையத் தடை விதித்து உரிமையியல் நீதிமன்றம் கடந்த மே 16-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கிறோம். சிவலிங்கத்தின் பாதுகாப்பு தொடர்பான உத்தரவின் ஒரு பகுதியை மட்டுமே தக்கவைத்துக்கொள்கிறோம். இந்த மசூதி வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிடுகிறோம்” என குறிப்பிட்டுள்ளது.