மும்பை: இந்திய கடற்படையின் இரண்டு முன்னணி போர்க் கப்பல்களான சூரத், உதய்கிரி ஆகியவற்றை மும்பையில் இன்று (செவ்வாய்கிழமை) பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத், உதய்கிரி போர்க் கப்பல்களை இன்று (மே17) மும்பையின் மாஸ்காவோன் கப்பல்துறை நிறுவனத்தில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சூரத் போர்க்கப்பல் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்க வல்லது. உதய்கிரி ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்டதாகும்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர், “நாட்டின் கடல்சார் திறனை அதிகரிக்கும் அசைக்க முடியாத அரசின் உறுதிப்பாட்டுக்கு இந்தப் போர்க்கப்பல்கள் வலுசேர்க்கும். தற்சார்பு இந்தியா என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல்களைக் கட்டிய மாஸ்காவோன் தளத்தை பாராட்டுகிறேன். இந்தியாவின் வளர்ந்து வரும் உள்நாட்டுத் திறனுக்கு உதாரணமாக இந்த கப்பல்கள் திகழ்கின்றன. மிக அதி நவீன ஏவுகணைகளை தாக்கிச் செல்லும் திறன் கொண்ட இந்த கப்பல்கள் எதிர்கால தேவைகளையும் பூர்த்தி செய்யும்” என்றும் தெரிவித்தார்.