ஐதராபாத்: மறைந்த என்டிஆர் என்கிற நந்தமூரி தாரக ராமாராவ், பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாக புகழ்பெற்றவர். தெலுங்கு தேசம் கட்சி தொடங்கிய அவர், ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்தார். தெலுங்கு ரசிகர்கள் பலர் அவர் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பின் காரணமாக, இன்றும் அவரை போற்றி வருகின்றனர். என்டிஆரின் பிறந்தநாள் வரும் 28ம் தேதி வருகிறது. அன்று அவருக்கு 99 வயது முடிந்து 100வது வயது தொடங்குகிறது. இதையொட்டி என்டிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை இந்துப்பூர் எம்எல்ஏவும், நடிகரும், என்டிஆரின் மகனுமான பாலகிருஷ்ணா தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி என்டிஆர் பிறந்த நிம்மகுருவில் காலையில் நடக்கிறது. குண்டூர் மற்றும் தெனாலியில் முறையே மதியம் மற்றும் மாலையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் என்டிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதால், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரளாக வந்து கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.