புதுடெல்லி,
10 முதல் 15 ஆண்டுகால பழமையான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி நொய்டாவை சேர்ந்த வக்கீல் அனுராக் சக்ஸேனா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு குறித்து தெரியுமா? தெரிந்தும் வாதிட முற்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என மனுதாரரை நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மனுதாரர் அனுராக் சக்ஸேனா வாதிடுகையில், பழமையான வாகனங்களை தடை செய்வதால், புதிய வாகனங்கள் உற்பத்தி அதிகரிக்கும். பழமையான வாகனங்களுக்கு குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? எனவே பழமையான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.
அவரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க முற்பட்டபோது, மனுதாரர் மீண்டும் வாதிட முயன்றார். அப்போது நீதிபதிகள், கோர்ட்டு நேரத்தை வீணடித்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூபாய் ஒரு கோடி அபராதம் விதிப்போம் என்றும், உரை நிகழ்த்த சுப்ரீம் கோர்ட்டு ஒன்றும் ராம்லீலா மைதானம் அல்ல என்றும் எச்சரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.