நேற்று மதியம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள விமான நிலையத்திற்கு ஒரு மர்மத் தொலைபேசி அழைப்பு வந்தது.
தொலைபேசியில் பேசியவர், போலந்து நாட்டின் Warsaw நகரிலிருந்து சூரிச் வந்துள்ள Helvetic Airways நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் அனைத்துப் பயணிகளையும், விமானப் பணியாளர்களையும் விமானத்திலிருந்து வெளியேற்றினர்.
சூரிச் மாகாண வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை சோதனையிட்டதில், சந்தேகத்துக்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை.
அதைத் தொடர்ந்து அந்த அழைப்பு போலியான மிரட்டல் என்பதை உறுதி செய்துகொண்ட பொலிசார், மாலை 5.00 மணியளவில் விமானத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, அது பயணிக்கத் தடையேதும் இல்லை என தெரிவித்தார்கள்.