ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்ப குடும்பன் பச்சேரி என்ற எம்ஜிஆர் கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி. இவர் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை கவனித்த அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் அவரை தடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்”கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறும்படி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். தொடர்ந்து என்னை தொந்தரவு செய்து வருவதுடன், எனது மகனையும் அவர்கள் அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளிக்க முயற்சி செய்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதம் மாற சொல்லி கட்டாய படுத்துவதாக கூறி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு உடலில் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.