மும்பை,
15-வது ஐபிஎல் சீசன் பரபரப்பான பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை, மும்பை அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த முறை பல அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். பின்னர் அணியின் தொடர் தோல்வி காரணமாக அவர் கேப்டன்சியை ராஜினாமா செய்தார்.
அவர் கேப்டனாக செயல்பட்ட போட்டிகளிலும் அவர் தனது தனிப்பட்ட ஆட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை. அது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.
அதேபோல் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக செயல்பட்டு வரும் மயங்க் அகர்வால் இந்த சீசனில் தனது தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல் திணறி வருகிறார்.
இந்த நிலையில் கேப்டன்சி அழுத்தத்தால் வீரர்களின் தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ” ஐபிஎல் கேப்டன்சியில் நடக்கும் குழப்பங்களை அதிகம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்க்காத வீரர்களுக்கு கேப்டன்சி வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலம் நடக்கும்போது மயங்க் அகர்வாலை பஞ்சாப் அணி கேப்டனாக்கப் போகிறார்களா என யோசித்தோம். ஏனென்றால், சில வீரர்களைப் பார்க்கும்போது, அவர்களுக்குத் தலைமைப் பண்பு இருக்கிறதா என ஆச்சரியமாக உள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென எங்கு இருந்தோ கேப்டன் ஆனார். இருப்பினும் அவர் ஒரு கேப்டனாக பார்க்கப்பட்டவர். ஹர்திக் பாண்டியா நன்றாக செயல்பட்டுள்ளார். ஆனால் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம்.
அதனால் மயங்க் அகர்வால் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி இருக்கக்கூடும். கேப்டன்சி சில வீரர்களுக்கு அழுத்தத்தை தருகிறது. இதனால் அவர்களின் தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கப்படுகிறது” என மஞ்சரேக்கர் தெரிவித்தார்.