வீடு கட்டாமலேயே வங்கிக்கணக்கில் பணம்: புதிய தலைமுறை கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 435 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக போலியாக கணக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியது தொடர்பாக ஒன்றிய அலுவலகத்தில் பணியிலிருந்த ஒன்றிய ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட 25 பேருக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து புதிய தலைமுறை மேற்கொண்ட கள ஆய்வில் அந்த 435 வீடுகளும் கட்டப்படாமலே, கட்டப்பட்டதாக அதிகாரிகள் அரசுக்கு போலியான தகவல் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பயனாளிகளின் படங்களை வைத்து முழுமையாக வீடு கட்டியதுபோல் போலியாக ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகளில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட இலவச வீடுகளில் மோசடி நடந்துள்ளதாக அந்த ஒன்றியத்துக்குட்பட்ட நபர் ஒருவர் புதுக்கோட்டை ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த ஊரக வளர்ச்சித் துறையின் தணிக்கை அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது அதில் 435 பயனாளிகளுக்கு வீடு கட்டாமலே வீடு கட்டப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்து அவர்களின் வங்கிக்கணக்கில் பணத்தை ஒன்றிய அதிகாரிகள் செலுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.
image
இதனால் அதிர்ச்சி அடைந்த விசாரணைக்குழு அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பவம் நடந்த காலகட்டத்தில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பணியிலிருந்த ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மேற்பார்வையாளர், பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட 25 அரசு அலுவலர்களுக்கு 17B யின் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதுகுறித்து நேற்று காலை புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. அதோடு மட்டுமின்றி சம்பந்தப்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனரியேந்தல், கரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது. அதில், ஏற்கெனவே விசாரணை செய்த அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின்படி 435 பயனாளிகள் வீடு கட்டுவதற்கான எந்தவித முயற்சியுமே மேற்கொள்ளாத நிலையில் அவர்களின் வங்கிக்கணக்குகளில் வீடு கட்டப்பட்டுவிட்டதாக 4 தவணையாக பணம் வந்துள்ளது தெரியவந்தது.
image
அதில் சில பயனாளிகள் 90 ஆயிரம் வரை பணம் எடுத்துள்ளனர். சில பயனாளிகள் 26 ஆயிரம் ரூபாய் முதல் 52ஆயிரம் ரூபாய் வரை பணத்தை எடுத்துள்ள நிலையில் அதன் பின்பு அவர்களது வங்கிக்கணக்கையும் அதிகாரிகள் முடக்கியுள்ளது தெரிய வந்தது. இதனால் வீடு கட்டும் முயற்சியையும் கைவிட்ட பயனாளிகள் அப்படியே தாங்கள் ஏற்கெனவே இருந்த குடிசை வீடு மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர்.
எப்படி இந்த முறைகேடு நடந்தது என்பது குறித்து நாம் கள ஆய்வு மேற்கொண்டபோது….
பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்(PMAYG) 272 சதுர அடி கட்டடம் கட்டுவதற்கு 1 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்படும். மேலும் கழிப்பறை கட்டினால் 12 ஆயிரமும் பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் 90 நாட்கள் வேலை ஒதுக்கீடு செய்து 18 ஆயிரம் பணமும் இதே திட்டத்தில் வழங்கப்பட்டது. வீடு கட்டும் பயனாளிகளுக்கு முதல் தவணையாக 26 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் போடப்படும். இதனை வைத்து அவர்களது வீட்டின் அஸ்திவார வேலையை துவங்கவேண்டும்.
இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என்பதால் அவர்களால் கையில் இருந்து பணம் போட்டு வீடுகட்ட முடியாத நிலை உள்ளது. எனவே அஸ்திவாரம் போடுவதற்கு அரசு வழங்கும் முதல்கட்ட தொகை 26 ஆயிரம் போதாது என்ற நிலையில் அந்த பணத்தை அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் பயனாளிகள் வங்கியில் இருந்து எடுத்து மற்ற செலவினங்களை செய்துள்ளனர். முதல் தவணை தொகையை மட்டும் பயனாளிகள் எடுத்துக்கொள்ளும் முறை இருந்துள்ளது. வீடு கட்டாதவர்களுக்கும் 1 லட்சத்து 70 ஆயிரத்தில் 110 மூட்டை சிமெண்ட், 300 கிலோ கம்பி, இரண்டு கதவுகள், இரண்டு ஜன்னல்கள் ஆகியவற்றை அரசு வழங்குவதால் அதற்குரிய தொகையை கழித்து மீதி பணம் 1 லட்சத்து 20 ஆயிரம் பயனாளிகள் வங்கிக்கணக்கில் நான்கு தவணைகளாக போடப்படும்.
image
முதல் தவணையாக 26 ஆயிரத்து 29 ரூபாயும், இரண்டாவது தவணையாக 26 ஆயிரத்து 715 ரூபாயும், மூன்றாவது தவணையாக 26 ஆயிரத்து 681 ரூபாயும், மூன்றாவது தவணையாக 40 ஆயிரத்து 575 ரூபாயும் வழங்கப்படும். இதில் முதல் தவணையை தவிர மற்ற மூன்று தவணைகளில் அதிகாரிகள் கண்காணித்து சம்பந்தப்பட்ட பயனாளி வீடு கட்டுகிறார் என்பதை ஆய்வு செய்து தற்போது வீடு எந்த அளவு கட்டப்படுகிறது என்பதை புகைப்படம் எடுத்து, அதனை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள வெப்சைட்டில் பதிவேற்றம் செய்த பின்புதான் அவர்களுக்கு பணம் வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் இதையெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் அடுத்தடுத்து சம்பந்தப்பட்ட பயனாளி பணிகளை மேற்கொண்டது போல் போலியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோஷாப்பில் போட்டோவை வீடு கட்டப்பட்ட இடத்தில் பயனாளி இருப்பது போல் கிராபிக்ஸ் செய்து அதனை சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் ஏற்றி பயனாளிகளுக்கு அதிகாரிகள் பணத்தை வழங்கி உள்ளனர். எதற்காக அதிகாரிகள் அவ்வாறு செய்தார்கள்? குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கை முடிக்க வேண்டும் என்ற உயர் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் அவ்வாறு செய்தார்களா.? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
உயரதிகாரிகள் என்னதான் அழுத்தம் கொடுத்து இருந்தாலும் பயனாளிகளின் வீடுகளை பார்வையிட்டு அவர்கள் வீடு கட்டும் பணியை துவக்கி இருந்தால் மட்டுமே அதிகாரிகள் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணத்தை பரிமாற்றம் செய்து இருக்க வேண்டும்,அதற்கு மாறாக போலி ஆவணம் தயார் செய்து பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை பரிமாற்றம் செய்ததுதான் தற்போது அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது.
image
குறிப்பாக கரூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோணறியேந்தல் என்ற கிராமத்தில் 3 பேருக்கு இலவச வீடு கிடைத்த நிலையில் செல்வி என்பவர் 3 வருடங்களுக்கு முன்பு 42 ஆயிரம் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளார். ஆனால் இவர் வீடு கட்டும் பணியை ஆரம்பிக்கவே இல்லை. அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் பணத்தை செலவு செய்து விட்டார். இவரது வீட்டிற்கு இதுவரை எந்த அதிகாரியும் வந்து ஏன் பணம் எடுத்து வீடு கட்டவில்லை என்று கேட்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
இதேபோன்று இந்த கிராமத்தில் ராஜாமணி என்பவர் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 2 தவனைகளாக 35 ஆயிரம் ரூபாய் எடுத்து சிமெண்ட், ஹாலோபிளாக் கல் மற்றும் மணல் வாங்கிய நிலையில் மேற்கொண்டு பணம் எடுக்க முடியாத நிலையில் 3 வருடமாக வீடு கட்டாமலேயே இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கும் இதுவரை அதிகாரிகள் வரவில்லை என்று தெரிவிக்கிறார்.
முத்து சிவபாக்கியம் என்பவருக்கு அரசு வழங்கிய 1 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல் இருக்கும் நிலையில் இவரது வங்கிக்கணக்கிற்கு பணம் எதுவும் ஏறவில்லை. இவர் வீடும் கட்டவில்லை. இலவச வீடு கட்டும் பயனாளிகளை அதிகாரிகள் கவனிக்கத் தவறியது, வேறு வழியின்றி மேலதிகாரிகளுக்கு கொடுத்த பொய்யான தகவல்களால் இந்த தவறு நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் வீடு கட்டாத பயனாளிகளுக்கு வழங்கியதாக சிமெண்ட், கம்பி, கதவு, ஜன்னல் ஆகியவற்றை கணக்கு காண்பித்திருப்பார்கள், அதை யாருக்கு வழங்கியிருப்பார்கள் என்ற கேள்வியும் இருக்கின்றது.
image
2016-20 காலகட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் இல்லாத நிலையில் முழு விபரத்தையும் கவனித்தது ஊராட்சி செயலாளர்கள் தான். அந்தந்த கிராமத்தின் நிலை இவர்களுக்கு முழுமையாக தெரிந்திருக்கும். அதனால் ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள ஊராட்சி செயலாளர்களிடமும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 35 ஊராட்சிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், ஆய்வு முடிந்த பின்புதான் இதில் நடந்த தவறுகள் தெரிய வரும் என சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் தெரிவித்தாலும் நமது கள ஆய்வில் பயனாளிகள் வீடு கட்டாமலே பணத்தை பெற்றிருப்பதும் இந்த விவகாரத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.
இனிமேல் இது குறித்து முறையான நடவடிக்கை எடுத்து தகுதியான பயனாளிகளுக்கு வீடு வழங்குவதோடு இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.