புதுடெல்லி: அரசு முறைப் பயணமாக ஜமைக்காவுக்கு சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தைத் திறந்து வைத்தார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் நாடான ஜமைக்காவுக்கு மே 15-ம் தேதி மாலை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை கிங்ஸ்டனில் உள்ள தேசிய மாவீரர் பூங்காவுக்கு சென்ற ராம்நாத் கோவிந்த், வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், ஜமைக்காவின் கவர்னர் ஜெனரல் சர் பெடரிக் ஆலனை அவரது அதிகாரப்பூர்வ கிங்ஸ் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, ஜமைக்கா, இந்தியா இடையே தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பான சேவைகள், மருத்துவம், மருந்துத்துறை, கல்வி, விளையாட்டு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். கரோனா பெருந்தொற்று காலத்திலும், இந்தியா, ஜமைக்கா நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், தொழில், விவசாயம் போன்ற துறைகளில் இருநாடுகளின் முதலீடுகள் அதிகரித்துள்ளதாக ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
இருநாடுகளிடையேயான கல்வி, வளர்ச்சி தொடர்பாக பேசிய குடியரசு தலைவர், தனது வளர்ச்சிப் பாதையின் போது பெற்ற அனுபவ அறிவு, திறன்களை ஜமைக்கா போன்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டார். அதன் பின்னர் ஜமைக்கா இல்லத்தில், பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னசை சந்தித்து பல்வேறு துறைகள் தொடர்பான வளர்ச்சிகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இருநாடுகளிடையே ராஜ்ஜிய ரீதியிலான பயிற்சித் துறையில் ஒத்துழைப்புக்கான வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம், ஜமைக்காவின் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்க அமைச்சம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஜமைக்காவில் இந்தியர்கள் அதிக அளவில் வாழும் பகுதிக்கு அம்பேத்கர் சதுக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரண்டு நாடுகளும் புவியியல் ரீதியாக வெவ்வேறு திசைகளில் இருந்தாலும், அவற்றின் இடையே நல்லுறவு நீடிப்பதாக தெரிவித்தார்.