சென்னை: தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்துகள் விவரங்களை புத்தகமாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து இதுவரை ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. கோயில் நிலங்களை விழிப்புடன் பாதுகாக்க, அறநிலையத் துறை அலுவலகங்களில் வட்டாட்சியர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுபோலவே நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வாடகை, குத்தகை பாக்கிகளை வசூலிக்கவும் வளர்ச்சியடைந்துவரும் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கடைகளுக்கான வாடகை நிர்ணயங்களைக் காலத்துக்கேற்ப உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இம்முறை திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கோயில்கள் நிர்வாகம் சார்ந்து தனி அக்கறை காட்டிவருகிறது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துகள் விவரம் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், இந்த புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்பு, இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். அத்தகவல்கள் நூலாக்கம் பெற்று ஆவணமாகியுள்ளன. இது தொடக்கம்தான்! எஞ்சியுள்ள கோயில் சொத்துகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைப்போம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.