ஒரே பாலின திருமண அங்கீகார விவகாரம் ஒன்றிய அரசின் பதில் மனுவில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள்: டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களுடன் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ததை டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையான கண்டித்துள்ளது. ஒரே பாலினத்தவர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி, ஒரே பாலின தம்பதியினர் தாக்கல் செய்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையை யூடியூப் போன்ற ஏதேனும் தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி சில தம்பதியினர் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சன்கி தலைமையிலான அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசின் பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளைப் பார்த்து நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். அரசு தரப்பு வக்கீலைப் பார்த்து நீதிபதிகள், ‘நீங்கள் அந்த பிரமாண பத்திரத்தை படித்துப் பார்த்தீர்களா? மறுபரிசீலனை செய்யாமல் இந்த பிரமாண பத்திரத்தை பதிவு செய்யுமாறு தாக்கல் செய்துள்ளீர்கள். இது சரியல்ல. இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளுடன், பொறுப்பான அரசிடமிருந்து இப்படி ஒரு பதில் மனு வரவே கூடாது. இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை செய்யாதீர்கள். நீங்கள் வழக்கின் நேரடி ஒளிபரப்பை ஏற்கலாம் மறுக்கலாம். ஆனால், பல ஆண்டுகளாக போராடிய பலரின் போராட்டத்தை தயவு செய்து சிறுமைப்படுத்தாதீர்கள்,’ என கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு தரப்பு வக்கீல், ‘இதற்கான பழியை நானே ஏற்கிறேன். பிரமாண பத்திரத்தை மறுபரிசீலனை செய்து சரியான ஒன்றை தாக்கல் செய்கிறேன்,’ என்றார். இதைக் கேட்ட நீதிபிகள் வழக்கை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.* பிரமாண பத்திரத்தில் என்ன இருந்தது?பிரமாண பத்திரத்தில் ஒன்றிய அரசு, ‘இந்த விவகாரம் ஒன்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. மனுதாரர்கள் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு வியத்தகு தோற்றத்தை உருவாக்கவும், அனுதாபத்தை பெறவும் இதுபோல முயற்சிக்கிறார்கள். யூடியூப்பில் சப்ஸ்கிரைபர்களை அதிகரித்துக் கொள்வதற்கான செய்யும் முயற்சிகள் இவை. இதனால், நீதி வழங்குதலில் எந்த தாக்கமும் ஏற்படாது. இது, நீதி நிர்வாகத்தின் செயல்பாட்டை பாதிக்கும். எனவே, நேரடி ஒளிபரப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.