சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், இதர உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கப்பலை கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களின் வாழ்க்கை என்பது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ரூ.123 கோடி மதிப்பிலான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக நாம் பார்க்க முடியாது. அங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் எத்தகையவர்கள் எனப் பார்க்க முடியாது. அந்த நாட்டு மக்களுக்கு நம்மால் ஆன உதவியை நாம் செய்தாக வேண்டும். முக்கியமாக ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள உயிர்காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படும். இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. மத்திய அரசு அனுமதியைக் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் உதவிக்கு அனுமதியளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில், தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை, மத்திய அரசுடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பொருட்களை இலங்கை அரசு உரியவர்களுக்கு வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை பெட்டிகளில் அடைத்து கப்பலில் ஏற்றும் பணி கடந்த சில நாட்களாக வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னைத் துறைமுகத்தில் அம்பேத்கர் கப்பல் நிறுத்தும் இடத்தில் உள்ள டபிள்யூ-க்யூ-4 பெர்த்தில் நிறுத்தப்பட்டு உள்ள ‘டான் பின்ஹ்-99’ என்ற கப்பலில் அரிசி, பால் பவுடர் மற்றும் மருந்து பொருட்களை லாரியிலிருந்து கிரைன் உதவியுடன் கப்பலில் ஏற்றும் பணி நேற்று தொடங்கியது.
மருந்துப் பொருட்களை பொருத்தவரையில் முதல்கட்டமாக ரூ.8 கோடியே 87 லட்சத்து 9,593 மதிப்பில் 55 வகையான அத்தியாவசிய மருந்துகளும், 2 சிறப்பு மருந்துகளும் 700 அட்டை பெட்டிகளில் அனுப்பப்படுகிறது. இதில் 7 வகையான மருந்துகள் குளிர்சாதன வசதிகள் மூலம் எடுத்து செல்ல வேண்டும் என்பதால் அதற்கு ஏற்ப பேக்கிங் செய்யப்பட்டு கப்பலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பகுதியில் ஏற்றப்பட்டு, இப்பணி முடிவடைந் துள்ளது.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 18) மாலை 5 மணிக்கு கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.