சட்டவிரோதமாக சீனர்களுக்கு விசா பெற உதவியதாக கார்த்தி சிதம்பரம் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ., அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உள்துறை செயலாளர் ஆகியோருக்குத் தெரியாமல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என சந்தேகம் எழுப்பியுள்ளது.
சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் நேற்று சி.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற உதவியதாக கார்த்தி சிதம்பரம் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மான்சா எனும் பகுதியில் TSPL எனும் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது வேதாந்த குழும நிறுவனங்களில் ஒன்று.
இந்த அனல் மின் நிலையத்திற்கு ஆலைகளை அமைக்கும் ஒப்பந்த பணிகளை செப்கோ எனும் சீன நிறுவனம் மேற்கொண்டு வந்துள்ளது இந்த நிறுவனத்தில் பணி புரிவதற்காக 263 சீன நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பிராஜக்ட் விசாவில் இந்தியா வந்துள்ளனர்.
அனல்மின் நிலையத்தின் பணிகள் நிறைவு பெறாததால் தொடர்ந்து பிராஜக்ட் விசாவில் வந்த சீன நாட்டினரின் விசாவை நீட்டிப்பு செய்ய அந்நிறுவனம் முயன்றது.
263 பேருக்கு விசா காலம் நிறைவு பெற்றதால் அதை நீட்டிக்க அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் என்பவரை TSPL அனல் மின் நிலைய நிறுவனத்தின் நிர்வாகி விகாஷ் மஹாரியா அணுகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பாஸ்கரராமனிடம் இருந்து இமெயில் மூலம் விசா நீட்டிப்பு செய்வதற்கான விண்ணப்ப கடிதம் கார்த்தி சிதம்பரத்திற்கு அனுப்பப்பட்டவும், விசா நீட்டிப்பு செய்ய 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று கார்த்தி சிதம்பரம் அனுமதி கடிதம் வாங்கி கொடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
2010-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது தான், மின் உற்பத்தி மற்றும் இரும்பு உற்பத்தி தொழில் மேற்கொள்ள வரும் வெளிநாட்டினருக்காக புராஜக்ட் விசா அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான புதிய விதிகள் வகுக்கப்பட்டதையும் சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த விதிகளை மீறி லஞ்சம் பெற்றுக் கொண்டு புராஜக்ட் விசா நீட்டிப்பிற்கான அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
லஞ்ச பணத்தை மும்பையைச் சேர்ந்த பெல் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலமாக, TSPL நிறுவனம் பரிவர்த்தனை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
இந்த முறைகேடு அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரின் கவனத்தை மீறி நடந்திருக்க வாய்ப்பில்லை என சிபிஐ சந்தேகம் எழுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் வேதாந்தா குழும நிறுவனத்தின் போர்டு உறுப்பினராக சிதம்பரம் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ , மும்பையில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து சென்னையில் இயங்கிய மெல்ட்ராக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்திருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன், டிஎஸ்பிஎல் நிறுவன நிர்வாகி விகாஸ், மும்பையை சேர்ந்த பெல் நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத உள்துறை அமைச்சக ஊழியர்கள் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர், பாஸ்கர ராமனை சி.பி.ஐ போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமனின் வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லண்டனில் இருக்கும் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.