புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடுத்தடுத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகளவில் உள்ளதால், ஒவ்வொரு யாத்திரிகருக்கும் ரூ.5 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யவும், அனைவருக்கும் தனிச்சிறப்பான ரேடியோ அலை அடையாள அட்டைகள் (ஆர்எப்ஐடி) வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அரவிந்த் மேத்தா தெரிவித்துள்ளார்.
அமர்நாத் யாத்திரை வழித்தடத்தில் வைஃபை மற்றும் முறையான விளக்கு வசதிகள் செய்யப்படும். பாபா பர்ஃபனியின் தரிசனம், அமர்நாத் குகை ஆரத்தி நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். அடிவார முகாமில், மதம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் குறித்து அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய வேண்டும், அவர்கள் எந்த பிரச்சினைகளையும் சந்திக்க கூடாது என்பதில் மோடி அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.