குஜராத் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார் ஹர்திக் படேல். குஜராத் ஓபிசி பிரிவினரின் அடையாளமாக அறியப்படும் ஹர்திக்கின் விலகல் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.
தனது ராஜினாமா குறித்து ஹர்திக் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், “இறுதியாக, காங்கிரஸ் கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் விலகும் முடிவை எடுக்கும் துணிவை வரவழைத்துக் கொண்டுள்ளேன். எனது முடிவை குஜராத் மக்களும், என் அரசியல் சகாக்களும் வரவேற்பார்கள் என்றே நினைக்கிறேன். இந்த முடிவால் குஜராத்துக்காக எதிர்காலத்தில் நேர்மறையாக செயல்பட முடியும் என நான் பூரணமாக நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி அண்மையில் குஜராத்துக்கு வந்து சென்ற் நிலையில் ஹர்திக் படேலின் இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஹர்திக், “நான் முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேச முயன்றபோது அவர்கள் குஜராத் பிரச்சினைக்கு செவி சாய்ப்பதைவிட மொபைல் போன்களில் பரபரப்பாக மூழ்கியிருந்தனர். குஜராத் காங்கிரஸ் மூத்த தலவர்களுக்கோ, டெல்லியில் இருந்து வரும் கட்சி மேலிடத் தலைவர்களுக்கு ‘சிக்கன் சேண்ட்விச்’ சரியாக தயாராகிறதா என்பதை கவனிப்பதில்தான் அக்கறையே தவிர மக்களுக்கான யாத்திரையில் எந்த அக்கறையும் இல்லை. இந்தியாவிற்கு காங்கிரஸ் தலைமை தேவைப்பட்டபோது ராகுல் வெளிநாட்டில் இருந்தார். இத்தகைய நிலையிலேயே நான் ராஜினாமா செய்கிறேன்” என்று தனது அதிருப்தியை ராஜினாமா கடிதத்தில் வெளியிட்டுள்ளார்.
புகைந்த அதிருப்தி.. இந்த ராஜினிமா ஒரே நாளில் நடந்துவிடவில்லை என்று கூறும் அரசியல் நோக்கர்கள் கடந்த சில மாதங்களாகவே ஹர்திக் படேல் காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் அதிருப்தி தெரிவித்து வந்ததை சுட்டிக் காட்டுகின்றனர். கட்சியில் தான் ஓரங்கட்டப்படுவதாக ஹர்திக் புலம்பிவந்ததையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இருப்பதை, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு வற்புறுத்தப்படும் மணமகன் போல் உணர்வதாக அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுவும் அவர் ராஜினாமா மனநிலையை வெளிப்படையாக எடுத்துக்காட்டியதாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் குஜராத் வந்த ராகுல் காந்தி, ஹர்திக் படேலை சந்திக்கவில்லை. இத்தகைய சூழல் ராஜினாமா எண்ணத்துக்கு மேலும் வலுசேர்ந்து அதை நிகழ வைத்துள்ளது.
யார் இந்த ஹர்திக்? குஜராத் மாநிலத்திலுள்ள ஓபிசி சமூகங்களுள் ஒன்றான பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் ஹர்திக் பட்டேல். கடந்த 2012 ஆம் ஆண்டு `சர்தார் பட்டேல் குழு’ என்ற ஓபிசி பிரிவினருக்கான அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார் ஹர்திக். அந்த அமைப்பின் மூலம் குறுகியகாலத்தில் குர்மி, பட்டிதார் உள்ளிட்ட பட்டேல் சமூக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய பேரணியையும், போராட்டத்தையும் முன்னெடுத்தார். 2015, ஜூலை மாதத்தில் அவர் தொடங்கிய போராட்டம், குஜராத் முழுவதுமே பரவியது. பட்டிதார் சமூகத்தினரின் பேராதரவுடன் குஜராத் மாநிலமே ஸ்தம்பித்தது.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்த அது கலவரமானது. கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவமும் வரவழைக்கப்பட்டது.
2017 குஜராத் சட்டப்பேர்வைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்து, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். 2020-ம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஹர்திக் படேல். ஆனால், அது அவருக்கு வாய்ப்பாக அல்லாமல் கடிவாளமாகவே இருந்தது. சுதந்திரம் அற்ற பதவி அவரை ஆரம்பம் முதலே அசவுகரியமாக வைத்திருந்ததாகக் கூறபப்டுகிறது.