முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின் 142வது அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் இலக்கணமாக அமைந்த தீர்ப்பு. நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு.
இந்த தீர்ப்பின் மூலம் மாநிலத்தின் உரிமை மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
இந்தியா முழுமைக்கான மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.