புதுடில்லி: ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடி தீர்மானித்தது. ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 தமிழர் விடுதலையில் தாங்களே இறுதி முடிவெடுப்போம் என்றது மத்திய அரசு.
இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியது. அதில், கவர்னர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு எனக் கருத்து தெரிவித்ததோடு, சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.
தலைவர்கள் கருத்து
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்
முதல்வர் ஸ்டாலின் பேட்டி:
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
பேரறிவாளனை உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்பு சட்டம் 142ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பா.ஜ., ஏற்று கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி
முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற கொலையாளிகள் 7 பேரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிராபரதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாக கூற விரும்புகிறோம்.
ம.தி.மு.க., பொது செயலர் வைகோ
பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. எந்த தவறும் செய்யாமல், இந்த இளைஞருடைய இளமைக்கால வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டுவிட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.