முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? உள்ளிட்டக் கேள்விகள் தமிழ்நாடு அரசியல் களத்தில் அனலடித்தன. `ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது… பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது’ என உச்ச நீதிமன்றம் முந்தைய அமர்வில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று பேரறிவாளனின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்புக் குறிப்பில், “பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் கால தாமதப்படுத்தியது தவறான காரியம். கருணை மனுக்கள், சட்டப்பேரவை தீர்மானத்தின் மீதான முடிவுகளை ஆளுநர்கள் எடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், ஆளுநர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறானது. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
மாநில அரசு ஒரு முடிவெடுத்து அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதற்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநரின் வேலை. அதில் தன்னுடைய சொந்த கருத்துகளையோ அல்லது அவர் தனது சொந்த முடிவையோ எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை. மாநில அரசின் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர்தான். இனி யாரும் அதை மறுக்கக் கூடாது.” என நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கின்றார்.