பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் ரியாக்ஷன் இதுதான்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் எழுவரில் ஒருவரான பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் படி ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே இன்று பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. இந்த நிலையில், பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன் எம்.பி

“அரசியல் சாசன அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.”

தொல். திருமாவளவன்

திருமாவளவன் எம்.பி

“பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடையேதுமில்லை! வாழ்விழந்து பாதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசு என்ன செய்யப்போகிறது? ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்ட வழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது. அனைத்து ஜனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் கிட்டிய நீதி. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள்.”

அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

“பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை பா.ஜ.க ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகிறோம்.”

டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

“ஆளுநரின் தவறான செயல்பாடுகளால் இந்த விடுதலை தாமதப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசியல் சட்ட பிரச்னைகளையெல்லாம் ஆராய்ந்து உச்ச நீதிமன்றமே இன்றைக்கு இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் வரவேற்கிறோம்.”

காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

“31 ஆண்டுக்கால சட்ட ரீதியானப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காங்கிரஸுக்கு மாற்றுக்கருத்து கிடையாது. பேரறிவாளனை விடுதலை செய்ததால் அவர் அம்மா அற்புதம்மாள் மகிழ்ச்சியாக இருப்பார்.”

டிடிவி தினகரன்

டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க

“பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அற்புதம்மாள் என்ற தாய் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்துச் செயல்படவேண்டியதன் அவசியத்தை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.”

கமல்ஹாசன்

கமல்ஹாசன் ம.நீ.ம

“ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்.”

கே.எஸ்.அழகிரி

“உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றாளிகள் நிரபராதிகள் அல்ல என்பதையும் அழுத்தமாகக் கூற விரும்புகிறேன்.”

கே.எஸ்.அழகிரி
வைகோ

பேரறிவாளனைப் போலவே மற்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும் என வைகோ, பழ.நெடுமாறன் மற்றும் முத்தரசன் ஆகியோர் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.