ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தர்ராஜ் பட்டிணத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரின் மனைவி பவானி. இந்தத் தம்பதியின் மகள் சுரேகா, பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். குடும்பமே சோகத்தில் மூழ்கியது. தந்தை இறந்த துக்கம் ஒருபுறம் என்றால், மறுநாள் காலை ப்ளஸ் 2 வணிகவியல் தேர்வு எழுத வேண்டிய சூழல் சுரேகாவுக்கு. என்றாலும், தேர்வு எழுதுவது என முடிவெடுத்து, பள்ளிக்கூடம் சென்றார்.
ஆசிரியர்கள் பதறி அவரிடம் பேசியபோது, ‘நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் விருப்பம். நான் தேர்வு எழுதாமல்போனால் தான் அவர் கவலைப்படுவார்’ என்று கண்ணீர் மல்கக் கூறினார். கலங்கிய ஆசிரியர்கள், அவருக்கு ஆறுதல் கூறி தேர்வு அறைக்குள் அனுப்பிவைத்தனர்.
சுரேகா தேர்வு எழுதி முடித்தவுடன், ஆசிரியர்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். தந்தையின் உடலைப் பார்த்து ஓடி வந்தவர், ‘அப்பா நான் எக்ஸாம் எழுதிட்டு வந்துட்டேன், எழுந்திருச்சு எக்ஸாம் எப்படி எழுதினேன்னு கேளுப்பா, அப்பா ப்ளீஸ் எழுந்திரிப்பா’ எனக் கதறிய சுரேகாவை பார்த்து, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் கலங்கினர்.
தந்தை இறந்த நிலையிலும், கனத்த இதயத்துடன் ப்ளஸ் 2 மாணவி தேர்வு எழுதியது அனைவரையும் நெகிழச் செய்தது.