கொல்கத்தா: திரிணாமுல் பெண் எம்பி நுஸ்ரத் ஜஹான் மாயமானதாக அவரது தொகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான், தனது முதல் திருமணம், அப்புறம் பிரிவு, மற்றொருவருடன் குழந்தையை பெற்றுக் கொண்டது, பின்னர் இரண்டாவது கணவரை அறிமுகம் செய்தது என்று அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் அவரது பாசிர்ஹத் மக்களவைத் தொகுதியில், அவரது பெயரில் திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டுள்ளது. நுஸ்ரத்தின் புகைப்படத்துடன் கூடிய அந்த போஸ்டரில், ‘நுஸ்ரத் ஜஹானை காணவில்லை; அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தெரியப்படுத்தவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த போஸ்டர்களை வெளியிட்டவர்களின் பெயரை போடுவதற்கு பதிலாக, திரிணாமுல் கட்சியினர் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் நகரின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. திரிணாமுல் தலைமை வரை தகவல் சென்றதால், அந்த போஸ்டர்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இருந்தும் போஸ்டர் ஒட்டியது யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பாசிர்ஹத் தொகுதி மக்கள் கூறுகையில், ‘லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, நுஸ்ரத் ஜஹான் தனது நாடாளுமன்ற தொகுதிக்கு வரவில்லை. இதனால் அவர் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். உள்ளூர் திரிணாமுல் கட்சி தொண்டர்களும் நுஸ்ரத் ஜஹான் மீது வருத்தம் அடைந்துள்ளனர். இவர் தனது சினிமா ஷூட்டிங் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதில் பிஸியாக இருப்பதால், மக்களை சந்திக்காமல் உள்ளார்’ என்று கோபத்துடன் கூறினர்.