கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி சென்னையில் ‘ராக் வித் ராஜா’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார் இளையராஜா. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ரசிகர்களும் ‘எங்கள் ஊரிலும் ஒரு கன்சர்ட் நடத்துங்கள்’ என ராஜாவிடம் கேட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 2ம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு கோவையிலுள்ள கொடிசியா அரங்கில் இளையராஜாவின் லைவ் இன் கன்சர்ட் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் தன் இசைநிகழ்ச்சி குறித்து இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக இளையராஜா அறிவித்திருக்கிறார். ரொம்பவே தனித்துவமான ஸ்பெஷல் நிகழ்ச்சி என்று அவர் குறிப்பிட்டதால், அது குறித்து விசாரித்தோம்.
“சமீபத்தில் இளையராஜா, மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து நீண்ட மௌனம் காத்து வந்தார். இசை ஞானியின் நலம் விரும்பிகள் பலரும் அவரிடம் தங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து வந்தனர். இளையராஜாவின் கோவை கான்சர்ட் ஜூன் 2-ம் தேதி நடக்கிறது என்கிற அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது.
தற்போதைய சூழலில் அது குறித்து சிந்தித்தவர், அன்று அவரது பிறந்த நாள் என்பதால், அதைக் கோவையில் தனிப்பட்ட முறையில் கொண்டாடிவிட்டு, அன்று இருந்த இசை நிகழ்ச்சியை ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைக்க முடிவு செய்திருக்கிறார். இந்த விஷயத்தில் இன்னொரு தகவலும் இருக்கிறது. இந்த கான்சர்ட்டைக் கோவையில் நடத்தக் காரணமே கங்கை அமரன்தானாம்” என்று ராஜாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எது எப்படியோ ராஜாவை வரவேற்க கோவையின் இசை ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்பதே உண்மை.