பிஜிங்:
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒரு பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
பூஜ்ய கொரோனா கொள்கையை கடை பிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை.
அதேபோல் தலைநகர் பிஜிங்கில் சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து பிஜிங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்நகரில் தினமும் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பிஜிங்கில் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது.
பிஜிங்கின் பிரபல சந்தை, மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடம், பஸ் நிலையம், சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த இடங்கள் மூடப்பட்டன.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பஸ், ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பிஜிங்கின் 190 பஸ் வழித்தடங்கள், 54 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றனர்.
பிஜிங்கில் உள்ள 16 மாவட்டங்களில் 12 மாவட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.
பாங்ஷான் மாவட்டத்தில் பஸ், மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாங்ஷான் மாவட்டத்தில் 13 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பிஜிங்கில் உள்ள பிரபல பிஜிங் பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.