நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் கடந்த 14ம் தேதி குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கல்குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 300 அடி ஆழ பள்ளத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளைய நயினார்குளத்தை சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அங்கு நின்ற 3 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்களும் பாறைகளில் சிக்கி நொறுங்கின.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கயிறு மூலம் குழிக்குள் இறங்கி 6 பேரையும் மீட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இடிபாடுகளில் சிக்கி லேசான காயமடைந்த முருகன் மற்றும் விஜய் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்றாவது நபர் செல்வம் பத்திரமாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிய முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்த மேலும் ஒரு நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 4-ம் நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணியின்போது கல்குவியலுக்குள் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேரில் இதுவரை 3 பேர் சடலமாகவும், 2 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.