"பேரறிவாளன் இன்னும் அந்த 19 வயது குழந்தைதான். அற்புதம்மாள் கால்களைத் தொட்டு வணங்குகிறேன்"- மிஷ்கின்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலைசெய்து உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பளித்தது. ஆளுநர் முடிவெடுக்கத் தாமதப்படுத்தியதால் 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்த் திரைத்துறையில் பேரறிவாளனுக்கு ஆதரவாகப் பேசியவர்களில் இயக்குநர் மிஷ்கின் முக்கியமானவர். இந்தத் தீர்ப்பு குறித்து அவரிடம் பேசினோம்.

“அற்புதம்மாளின் கால்கள் முக்கியக் காரணம். அந்தக் கால்கள் பல லட்சம் மைல்கள் நடந்திருக்கின்றன, தன் மகனின் விடுதலைக்காக! அந்தக் கால்களைத் தொட்டு வணங்கி முத்தமிடுகிறேன். அந்தத் தாயார் நடந்து நடந்து, ‘என் பிள்ளையைக் காப்பாத்துங்க, விடுதலை பண்ணுங்கனு’ கேட்டிருக்கிறார். அந்தத் தாயின் கண்ணீரின் உஷ்ணம்தான் பேரறிவாளனை வெளியே கொண்டு வந்திருக்கிறது. இதற்காகப் பலரும் போராடியிருக்கிறார்கள்.

பேரறிவாளன் – அற்புதம்மாள்

முக்கியமாக, கவின்மலர் தோழியைச் சொல்கிறேன். இருபத்துநான்கு மணிநேரமும் பேரறிவாளன் விடுதலைக்காகவே போராடினா… தன்னுடைய வேலையைத் துறந்து அவருடைய விடுதலைக்காகவே வேலை செஞ்சிருக்கா!

என்னைப் பார்க்கும் போதெல்லாம் பேரறிவாளன் பற்றி மட்டுமே மணிக்கணக்கில் பேசுவாள். இதைப் பற்றி என்னிடம் அத்தனை கையெழுத்துகள் வாங்கியிருக்கிறார். நிறையத் தோழர்களும் உழைத்திருக்கிறார்கள். பேரறிவாளன் என்னும் ஒரு மனிதனுக்காக மட்டுமே தமிழகம் கெஞ்சி வேண்டியிருக்கிறது. வேறு யாருடைய விடுதலைக்காகவும் இப்படி நடந்ததில்லை.

என்னிடம் பேரறிவாளன் இரண்டு முறை போனில் பேசியிருக்கிறார். அப்போதும் அவர், ‘என் விடுதலைக்காக ஏதாவது பேசுங்க’ன்னு என்னிடம் சொன்னதில்லை. ரொம்ப அன்பாகவும் பண்பாகவும் மட்டுமே பேசினார். என்னால் முடிந்தளவு முயற்சி பண்ணியிருக்கிறேன். இந்த இயற்கை 19 வயதில் சிறைக்குப் போன குழந்தையை இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு வெளியே கொண்டு வந்திருக்கிறது. அதனால் பேரறிவாளனை நான் இன்னும் குழந்தையாகத்தான் பார்க்கிறேன். கட்டிப்பிடித்து முத்தமிடுவேன். அந்த அம்மாவின் கால்களை முத்தமிடுவேன். என்னுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வேன். அற்புதம்மாள் ஒரு பிள்ளையைப் பெற்றார். ஆனால், பேரறிவாளன் இன்று எங்கள் எல்லாருடைய சகோதரராகவும் இருக்கிறார்.

மிஷ்கின்

நமது மாநில அரசு இதற்காக முயற்சிகள் எடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி! உதய்யிடம் இதைப் பற்றி நாங்கள் பேசியிருக்கிறோம். ‘அப்பா நிச்சயம் ஏதாவது பண்ணுவார்’ என அவர் எங்களிடம் உறுதியளித்து இருந்தார். அவர்கள் இருவருக்கும் பெரிய நன்றியைச் சொல்கிறேன். இந்த அரசு இந்த நேரத்தில் பேரறிவாளனை விடுதலை செய்து கொண்டு வந்தது பெரிய சந்தோஷம். தீபாவளி கொண்டாட்டம் மாதிரியே இவருடைய விடுதலை கொண்டாடப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்துக்கும் பெரிய நன்றி. ரொம்ப முக்கியமான அரசியல் சட்ட அமைப்பைப் பயன்படுத்தி அறிவை விடுதலை செய்திருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் நிலையில் சாதாரண மனிதனுக்கும் விடுதலை கிடைக்கும் என இந்தத் தீர்ப்பு நிரூபித்திருக்கிறது. இது ஜனநாயக நாடு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று நெகிழ்கிறார் மிஷ்கின்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.